Saturday, March 15, 2025

மும்மொழி - தமிழ் மொழிக்கு என்னவாகும் ?


ஒரு மொழி வலுவாக இருப்பதற்கு இன்றைய நிலையில் மூன்று காரணங்கள்.

 

1.     தொழில் நுட்பத்தின் மொழியாக இருப்பது

2.     சினிமா

3.     இலக்கியம்.

 

தமிழ் தொ.நு.மொழியாக இருக்க இயலாது. கல்லூரிப்படிப்பை தமிழ்மொழி வழியில் முயன்று பார்த்து கைவிட்டுவிட்டோம். காரணம் அதைக்கொண்டு உலக அளவுக்கு நாம் செல்ல இயலாது. தமிழ்நாட்டுக்குள்ளேயே செல்லுபடி ஆகும் அளவுக்கு தமிழகம் மாபெரும் பெரிய சந்தை அல்ல. எனவே மீதம் உள்ளது சினிமாவும் இலக்கியமுமே.

 

தமிழில் சினிமாவில் தொடர்ச்சி இருக்கிறது. தலைமுறை தலைமுறையாக படைப்பாளிகள், நடிக நடிகையர், தொழில்நுட்பர்கள் (கேமிரா, எடிட்டிங்..) என வந்துகொண்டே இருக்கிறார்கள்.

 

ஆனால் 70-களில் தமிழக சினிமாத்துறையில் கிட்டத்தட்ட ஒரு தேக்கம் இருந்திருக்கிறது. அப்போது இந்தி சினிமாக்களே தமிழகத்தை ஆக்கிரமித்திருக்கின்றன என்பது தெரிகிறது. சத்யராஜ், அவரது கல்லூரி நாட்களில் கல்லூரி மாணவர்களுக்கெல்லாம் இந்தி சினிமாக்களும் இந்தி சினிமா ஹீரோக்களான ரிஷி கபூர் போன்றவர்களும் ஆதர்சங்களாக இருந்தார்கள் என்று மேடையில் சொல்லியிருக்கிறார். இது உண்மைதான். ஏன் நானே 7-8 படிக்கையில் என்று நினைக்கிறேன், ஏக் துஜே கேலியேவின் ‘தேரே மேரே பீஜ்மே’ பாடலை எங்கள் கிராமத்திலேயே அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

 

இளையராஜா, பாரதிராஜா, மகேந்திரன் போன்றவர்கள் புண்ணியத்தில், தமிழகம் இந்தித் திரைப்படங்களில் இருந்து தமிழ்த் திரைப்படங்களை நோக்கி தனது பார்வையை திருப்பியது. (விகடனோ குமுதமோ ஒரு கேள்வி பதிலில், தமிழர்களை தமிழ்த்திரைப்படங்களை நோக்கி திருப்பியவர் இளையராஜா என்று சொல்லியிருந்தார்கள்) இல்லை என்றால் இன்று தமிழ்த்திரை உலகம் முழுக்க முழுக்க இந்தி திரையுலகால் ஆக்கிரமிக்கப்பட்டு சூம்பியே போயிருந்திருக்கும்.

 

அப்படி போன சமகால உதாரணங்கள் மராத்தி & வங்காளி திரையுலகம். மராத்தியின் புகழ்பெற்ற நாடக இயக்கமும் சத்யஜித் ரே, மிருணாள் சென் போன்ற உலகப்புகழ் பெற்ற இயக்குநர்கள் கோலோச்சிய வங்கத் திரையுலகும் இந்தித் திரையுலகால் முழுக்க விழுங்கப்பட்டுவிட்டன.

 

மராத்தியில் படமெடுத்தால் இலவசமாக பாடுகிறேன் என்றார் மராட்டியரான லதா மங்கேஷ்கர். Unfortunately, there were no takers. மகராஷ்டிராவில் வீடுகளில் மராட்டி சீரியல்கள்கூட பார்ப்பதில்லையாம், இந்தி சீரியல்கள்தானாம்.

 

இலக்கிய உலகிலும் அப்படியே.

 

தாகூரில் தொடங்கி, விபூதிபூஷன் பந்தோபாத்யாய, மாணிக் பந்தோபாத்யாய, அதீன் பந்த்யோபாத்யாய, தாராசங்கர் பானர்ஜி, மைத்ரேயி, மகாஸ்வேதா தேவி, ஆஷாபூர்ணா தேவி, தேவிப்பிரசாத் சட்டோபாத்யாய என்று பெரும் படைப்பாளிகள் இருந்த வங்க இலக்கியத்தில் இன்று வங்க மொழியில் இலக்கியம் படைப்பவர்கள் கிட்டத்தட்ட இல்லை. காரணம் படிக்க ஆளில்லை. காரணம் இந்தி & ஆங்கிலம்.

 

அதே போல, வி.எஸ்.காண்டேகர், வெங்கடேஷ் மாட்கூல்கர், காகா காலேல்கர் போன்ற அற்புதமான எழுத்தாளர்கள் கோலோச்சிய மராட்டிய மொழியில் இன்று இலக்கியமே கிட்டத்தட்ட அருகிவிட்டது. காரணம் ? அதேதான். இந்தி.

 

கிட்டத்தட்ட குஜராத்திலும் அதேதான் நிலை.

 

குஜராத் மொழி பேசுவோர் ஓரளவு அப்படியே இருக்க, வங்கமும் மராத்தியும் பேசுவோர் எண்ணிக்கை கடந்த 30-40 ஆண்டுகளில் குறைந்துவிட்டது.

 

ஏன் இந்த மூன்று மொழிகளை குறிப்பிடுகிறேன் என்றால், இந்தியை விரும்பி ஏற்ற நான்கு மாநிலங்களின் மொழிகள் இவை. அவற்றின் கதி இது.

 

தமிழகத்தில் சினிமாவும் இலக்கியமும் தொடர்ந்து நல்ல படைப்பாளிகள் இரண்டு துறைகளிலும் வந்துகொண்டே இருப்பதால் இன்னமும் உயிரோடு உள்ளது. அதற்குக் காரணம் நாம் தமிழை தொடர்ந்து கற்பித்துக்கொண்டு இருப்பதாலும் இந்தியை அனுமதிக்காததாலும். இந்தி உள்ளே வந்தால் மேலே குறிப்பிட்ட மூன்று மொழிகளுக்கும் நேர்ந்தமையே தமிழுக்கும் நேரும்.

 

Elite மக்கள் இந்தி பேசிக்கொண்டு இந்திப்படங்களை பார்ப்பதில் பெருமை கொள்ளும். அதைப்பார்த்து upper middle class மக்கள் காப்பியடிக்க, அவர்களைப்பார்த்து lower middle class காப்பியடிக்க, வெறும் ஒரு தலைமுறைக்குள்ளாக தமிழ்த் திரையுலகம் அழிந்து போகும். அதுவே இலக்கியத்திற்கும் நடக்கும்.

 

மறுபடி மறுபடி “மூன்றாம் மொழி என்றுதான் சொல்லியிருக்கிறார்கள், இந்தி என்று சொல்லவில்லையே” என்று வாதிடலாம். ஆனால் 3-ம் மொழி என்று தொடங்கி, இந்தி என்றுதான் வந்து நிற்கும். காரணம், இதே போல, ‘மூன்றாம் மொழி’ என்று சொல்லி மற்ற மாநிலங்களில் உள்ளே வந்து அதிகார மையத்தில் அமர்ந்தது இந்திதானே ? அவ்வளவு ஏன், தமிழ்நாட்டிலேயே இருக்கும் கேந்திரிய வித்தியாலயாவில் மூன்றாம் மொழியாகக்கூட தமிழ் இல்லையே ?

 

அனைத்து மொழிகளுக்கும் பொதுவாக இருக்கவேண்டிய மைய அரசு, இந்தி மொழிக்காக செலவிடும் தொகையில் கால்வாசிகூட மற்ற மொழிகளுக்காக செலவிடுவதில்லை. ஆகவே வேறு மொழி ஆசிரியர்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது என்ற காரணம் காட்டி இங்கும் இந்திதான் உள்ளே வரும். அப்படி வரும் இந்தி காலப்போக்கில் தமிழை கபளீகரம்தான் செய்யும்.

 

இந்தியை எதிர்த்து அன்று நாம் போராடியபோது நம்மைப் பார்த்து ஏளனமாக சிரித்த கன்னடர்கள் இன்று பெங்களூர் அவர்கள் கையை விட்டு நழுவிக் கொண்டிருப்பதைப் பார்த்து கையறு நிலையில் பதைபதைக்கிறார்கள். எப்படி இந்தி பெங்களூருவில் ஊடுறுவி இன்று கன்னடம் கிட்டத்தட்ட இரண்டாம் இடத்திற்கு வந்திருக்கிறது, எப்படி வட இந்தியர்கள், நிறைய இடங்களில் மிகுந்த ஆணவத்தோடு கன்னடர்கள் இந்தியில் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று ஒரு கன்னடர் கோரா-வில் எனக்கு விளக்கி பதில் சொல்லியிருந்தார்.

 

இன்னொரு வட இந்திய மொண்ணை, கேரளாவுக்கு சுற்றுலா வந்துவிட்டு திரும்பப்போய், எப்படி மலையாளிகள் தேசிய மொழியான இந்தியில் ஒரு அறிவிப்புப் பலகைகூட வைக்காமல், இந்தியில் பதில் சொல்லாமல் திமிராக நடந்துகொள்கிறார்கள் என்று தனது சமூக வலைதளப்பதிவில் எழுதியிருந்தது. அதற்கு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பக்குறிகள். இது எப்படி இருக்கு ?

 

இந்த வட இந்திய அமீபா-க்கள் ஃப்ரான்ஸ் போனால் ஃப்ரெஞ்ச் கற்றுக்கொண்டு பேசும். ஆனால் கேரளா வந்தால் ஒட்டுமொத்த கேரளமே இவர்களோடு இந்தியில் பேசவேண்டுமாம்.


No comments:

Post a Comment