கந்தர்வன்
அவன் பூமியில் கால் பாவாதவன். பூமியில் இருப்பவர்களெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவன் அவர்கள் குரலுக்கு செவிமடுப்பவனுமல்ல. அவன் செவிகொள்வது திருமுறை வகுப்புகளுக்கு மட்டுமே.
அவன் பூமி மனிதர்களுக்கு வழங்கவே இறங்கியிருப்பவன். அதனால்தான் தனது மரணத்தை ஊர் காணிக்கையாகக் கேட்கையிலும் தர சம்மதித்து ஊரை நிறைவாழ்வு வாழ வாழ்த்துபவன். அந்த இடத்தில் ஒருவகையில் கர்ணன் போலானவன். அதேபோல ஓரளவு வெறும் முள் கதையில் வரும் ஐசக்-கையும் நினைவுபடுத்துகிறான். கிறுக்கனாய் காட்சி தந்துகொண்டிருந்தவன் - தனது மீட்சிக்காக காத்துக்கொண்டிருந்தவன் - சட்டென்று தடையாக இருக்கும் முள்செடிகளை ஊடுறுவி ரத்தவிளாராக, நிர்வாணமாக, ஏசுவின் பாதங்களைப் பின்தொடர்ந்து ஓடி புதுப்பிறவி எடுக்கும் ஐசக்.
ஊர்ப்பெண்கள் அனைவருமே அந்த கந்தர்வன்மீது கிறக்கமாக இருக்க, அதன் பொருட்டு வள்ளியம்மை மட்டும் (கிட்டத்தட்ட ஊரின் அனைத்து பெண்களின் சார்பிலும்) கணவனிடம் இழிவுபடுகிறாள். அதனாலும்தானோ, அவள் எரிபுகுந்தாள் என்றுகூட தோன்றுகிறது. ஆமாம், கந்தர்வனோடு மரணத்தில் இணைந்துகொள்ளும் முடிவை எடுத்தது அவன்மீதுள்ள காதல் மட்டுமல்ல. அது ஒரு கோணம் மட்டும்தான். 'மானுடர்க்கென்று பேச்சுபடின்’ என்று மன்மதனை எச்சரிக்க அவள் ஆண்டாள் இல்லை அவள். எனவே ‘மானுடர்க்கென்று நிகழ்ந்து’விட்ட கோபத்தாலும்கூடத்தான். மரணத்தில் அவனோடு இணைந்து கந்தர்வியாகிவிடுகிறாள்.
No comments:
Post a Comment